×

அமெரிக்காவில் தமிழக மென்பொறியாளர் தம்பதி தற்கொலை 2 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு குழந்தையை மீட்டு வந்த உறவினர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி

சென்னை: அமெரிக்காவில் தமிழ்நாட்டை சேர்ந்த மென்பொறியாளர் தம்பதி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவர்களின் 17 மாத ஆண் குழந்தையை 2 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு மீட்டு உறவினர்கள் தமிழகம் கொண்டு வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை அருகே உசிலம்பட்டியை சேர்ந்த பிரவீன் மற்றும் திருச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி இருவருமே மென்பொறியாளர்கள். அமெரிக்காவில் சிப்பி மாகாணத்தில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி, விஸ்ருத் என்ற 17 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2022 மே மாதம், குடும்ப பிரச்னை காரணமாக தம்பதியர் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து அப்பகுதியில் வசித்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், தம்பதியரின் உடல்களை முறைப்படி இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தம்பதியின் 17 மாத ஆண் குழந்தையை, அமெரிக்காவில் ஒரு குடும்பத்திற்கு தத்துக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

அதோடு அமெரிக்காவில் உள்ள சைல்ட் புரோடக்‌ஷன் என்ற அமைப்பு, தங்களுடைய பராமரிப்பில் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருந்தனர். இந்நிலையில் தற்கொலை செய்து உயிரிழந்த தமிழ்ச்செல்வியின் தங்கை திருச்சியில் வசித்து வந்த அபிநயா முருகன், அமெரிக்கா சென்று, குழந்தையை தங்கள் பொறுப்பில் எடுத்து வர முடிவு செய்தார். ஆனால் அபிநயாவுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லை. ஆனாலும் அவருக்கும், அவருடைய அம்மாவுக்கும் அவசரமாக பாஸ்போர்ட் பெற்று, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று நடந்த சம்பவங்களை கூறி, குழந்தையை மீட்டு வருவதற்காக அமெரிக்கா செல்ல வேண்டும்.

அதற்கான அவசர கால விசா வழங்குங்கள் என்றும் முறையிட்டார். அதன்படி அபிநயாவிற்கு அமெரிக்கா செல்வதற்கான விசா கிடைத்தது.  இதையடுத்து அபிநயா மற்றும் அவருடைய அம்மா ஆகியோர் அமெரிக்கா சென்று, அங்குள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் அயலக தமிழர் நல வாரியம் ஆகியவற்றின் மூலம் குழந்தையை மீட்க முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளித்தனர்.

மேலும் அமெரிக்காவில் வழக்கறிஞர்களாக உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரும், நீதிமன்றம் மூலம் சட்டப் போராட்டத்தை தொடங்கினர். இந்த பிரச்னை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் எடுத்துச் செல்லப்பட்டது. உடனடியாக முதல்வர் உத்தரவின் பேரில், அயலக தமிழர் நல வாரிய நிர்வாகி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் குழந்தை அமெரிக்காவில் பிறந்திருந்ததால், அமெரிக்க நாட்டு பிரஜையாக இருந்தது.

எனவே அந்த குழந்தையை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சட்ட சிக்கல்கள் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு மைனர் குழந்தை பெற்றோரை இழந்து விட்டால், அந்தக் குழந்தையின் ரத்தம் சம்பந்தப்பட்ட உறவான குடும்பத்திற்கு மட்டும்தான் குழந்தையை பராமரித்து வளர்ப்பதற்கான முதல் உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க சட்டத்தில் இருக்கிறது. அதை எடுத்து காட்டி அபிநயா தரப்பினர் நீதிமன்றத்தில் வாதம் செய்தனர். அதன் பின்பு அமெரிக்க சட்ட நிபுணர்கள் மற்றும் அந்த மாகாணத்தின் கவர்னர் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்பின்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நீதிமன்றம், குழந்தையை சித்தி மற்றும் பாட்டிக்கு முறைப்படி தத்து கொடுத்து, இந்தியாவுக்கு கொண்டு செல்லவும் அனுமதி வழங்கியது. இதையடுத்து குழந்தையுடன் அபிநயா மற்றும் அவரது அம்மா ஆகியோர், அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களை அயலக தமிழர் நல வாரியத்தை சேர்ந்தவர்கள் வரவேற்றனர்.

அப்போது அபிநயா கூறுகையில், ‘எனது சகோதரி மறைந்து விட்டாலும், அவள் குழந்தையை எப்படியாவது இந்தியாவுக்கு கொண்டு வந்து வளர்க்க வேண்டும். என் சகோதரியின் நினைவாக அந்த குழந்தை இருக்க வேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்தோம். எங்களுக்கு தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். மேலும் அமெரிக்க சட்ட நிபுணர்கள், இந்திய தூதரக அதிகாரிகள், அமெரிக்கா வாழ் தமிழர்கள் முழு ஒத்துழைப்புடன் இரண்டு ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பின்பு, குழந்தையை இந்தியாவுக்கு கொண்டு வந்திருக்கிறோம். விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிப்போம்’ என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

The post அமெரிக்காவில் தமிழக மென்பொறியாளர் தம்பதி தற்கொலை 2 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு குழந்தையை மீட்டு வந்த உறவினர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி appeared first on Dinakaran.

Tags : US ,M.U. K. Stalin ,Chennai ,Tamil Nadu ,United States ,Usilambatiai ,Madurai ,
× RELATED சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது